அழுது அழுது
வீங்கிய கண்களோடு
மீண்டும் மீண்டும்
அழுத தோழிகளோடு
பள்ளியிலிருந்து வெளியில்
வந்தாள் என் மகள் !
வறுமை பிடித்து தின்ன
வாழ்க்கைக்கான தொழிலாய்
கையிலிருந்த தையல்
தொழிலும் நசிய
கட்டிய கணவனோ
டாஸ்மார்க்கில் குடியிருக்க
வயிற்றைக் கழுவ
வாங்கிய கடனோ
வட்டிக்கு மேல் வட்டியாய்
குட்டி போட
கந்து வட்டிக்காரர்கள்
வந்து கதவைத் தட்ட
நம்மைப் போன்றவர்கள்
மானத்தோடு வாழ இயலாது
வா சாவோம் என
அம்மாவும் மகளுமாய்
தூக்கில் தொங்கிய
கொடுமையினை செய்தியாய்
படித்தேன் காலையில் !
அப்பா ! நீங்கள் படித்த
செய்தியில் இருந்த
மாணவி என்னோடு
படிப்பவள் என்று
அழுதபடி வந்தாள்
எட்டாம் வகுப்பில்
படிக்கும் என் மகள் !
அப்படி படிப்பாள் அவள்!
யாரோடும் அதிர்ந்து
பேச மாட்டாள் !
வறுமை கொன்றதே அப்பா!
ஏழைகள் என்றால்
சாகத்தான் வேண்டுமா
இந்நாட்டில் என்றாள் ?
தற்கொலை கோழைத்தனம் !
பிச்சை எடுப்பதனினும்
மானமிழந்து வாழ்வதெனினும்
சாவது சிறந்தது என
முடிவெடுத்திருக்கலாம்
எனத் தேற்றினேன் நான் !
நாலாயிரம் கோடியில்
நாலு பேருக்காக
சொகுசு வீடு கட்ட
அனுமதிக்கும் அரசு
வறுமையால் சாவதையும்
வேடிக்கை பார்க்கிறது !
மக்களுக்காக
மக்களால்
மக்களே !
ஆளும் அரசுகள் எவ்வளவு நீட்டி
முழக்கினாலும்
மேடுகள் இன்னும் மேடாக
பள்ளங்கள் இன்னும் பள்ளமாக
பரிதவிக்கும் மக்கள்
இன்னும் பள்ளத்திற்குள் !
மேடும் பள்ளமும்
சமமாகும் நாளே
நான் வாழ்த்துச் சொல்லும் நாள் !
கவிதைகள் உலகம் ..smdsafa..